Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85-ல்இருந்து ரூ.90, இருமுறை கட்டணம் ரூ.125-ல் இருந்து ரூ.135, இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160, இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240, கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320, இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480, மிக கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.470-ல் இருந்து ரூ.515, இருமுறைக்கு ரூ.705-லிருந்து ரூ.770 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, ஒருமுறை பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.45 வரையும், இருமுறைப் பயணத்துக்கு ரூ.10 முதல் ரூ.65 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கட்டண உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.