ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு!

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு நவ. 05ம் தேதி முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35/- ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும். இந்த சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் டிச. 18-ம் தேதி முதல் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.

பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப் பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று ஆவின் நிறுவனம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.