திருவண்ணாமலையில் மே 13-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

தனியார் துறை நிறுவனங்களும்- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்டு சைஸ் புகைப்படம், ரேஷன் கார்டு, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் தெரிவித்து உள்ளார்.