i5 Sunrise City Property Promo Banner
தமிழ்நாட்டில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – குடியிருப்பு வாரியாக நடத்த உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.

இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி, குடியிருப்பு வாரியாக நடத்தப்படவுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக் கல்விப் பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

நடப்பாண்டு கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.