
கீழ்நமண்டி கிராமத்தில் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட பகுதி, பறவைகளாலும் சிறுநீர்நிலைகளாலும் பாறைகளாலும் மிக எழிலார்ந்த இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களைப் புதைத்த ஈமக்காடு அவர்களின் நாகரிக எச்சங்களும் உள்ளன.
இந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இக்கல்வட்டங்களில் நடுவில் மண்ணுக்கடியில் ஈமப்பேழையில் அக்காலத்தில் இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்துவிடுவது வழக்கம். இவ்வாறு புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கமாகும். இதுபோன்ற பல கல்வட்டங்கள் இங்கு உள்ளன. இவற்றில் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இவை தொல்லியலாளர்கள் பெருங்கற்கால கல்வட்டங்கள் என்று அழைக்கின்றனர்.




































