
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கடல் மட்டத்திலிருந்து 4,000 அடி உயரம் கொண்டது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலம் ஆகும். ஏழைகளின் ஊட்டி ஆக ஏழை எளிய மக்களால் வர்ணிக்கப்படும் இந்த ஜவ்வாதுமலை மேல்பட்டு கிராமத்தில் ஆசியாவிலேயே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய நீர் மத்தி மரம் அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த மரம் நீர்மருது என அழைக்கப்படுவது வழக்கம். இந்த மரத்தினை இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நீர் மத்தி என கூறுகின்றனர். செங்கத்திலிருந்து மேல்பட்டு செல்லும் சாலையில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த மரத்தின் அகலம் கிட்டத்தட்ட 15 நபர்கள் ஒன்று சேர்ந்து கை பிடித்துக்கொள்ளும் அளவிற்கு அகலம் கொண்டது. கிட்டத்தட்ட 20 பெரும் கிளைகளைக் கொண்ட மிக உயரமான பழமையான மரமாக காட்சியளிக்கிறது.
பொதுவாக இந்த மரம் பருவமழை காலங்களில் வேர்களின் மூலம் நீரினை சேமித்துக் கொண்டு கோடை காலங்களில் மரத்திலிருந்து சாரல் மழை போன்று தண்ணீரை ஊற்றும். ஆகவே இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கோடை காலங்களில் இந்த மரத்தின் அடியில் அதன் நிழலில் வந்து நின்றால் குளிர்ந்த காற்று வீசுவதுடன் குளிர்சாதன மெஷின்களில் இருந்து வருவது போல் குளுமையாக இருக்கும் என ஆர்வமுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த மரத்தின் வேர்கள் மரத்தினை சுற்றிலும் 800 மீட்டர் தூரம் படர்ந்துள்ளது. தற்பொழுது இந்த மரத்தினை சுற்றிலும் ஏராளமான நீர் மத்தி மரங்கள் சிறிது சிறிதாக வளர்ந்து வருகின்றன. மேலும் இந்த மரத்தின் இலைகள் மருத்துவ குணம் வாய்ந்து இருப்பதாக மக்கள் கருதுகின்றன.
மேல்பட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த மரத்தினை பாதுகாத்து இந்த மரத்தின் பெருமைகள், வரலாறுகள் குறித்து இந்த பகுதியில் கல்வெட்டு அமைக்க வேண்டும் என்றும் அப்போது தான் சுற்றுலா வரும் பயணிகள் இந்த மரம் குறித்து அறிய முடியும் எனவும் இதனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


































