புலிக்குத்திக் பட்டான் கல்பகுதி
திருவண்ணாமலை : ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 வருடம் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலை வரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம், உதயராஜா மற்றும் நீலகண்டன் இனைந்து ஜவ்வாது மலைப் பகுதியில் கள ஆய்வு மேற்க்கொண்ட பொழுது ஆவணம் செய்யப்படாத ஆயிரம் வருடம் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர்.
காப்புக் காடு
பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை பலாமரத்தூர் காப்புக்காட்டுக்குள் வலதுபுறமாகப் பிரியும் ஒற்றையடிப் பாதையில் வனத்துக்குள் சுமார் இரண்டு கி.மி பயணித்த பொழுது ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம். மேலும் அதனை ஆய்வு செய்த பொழுது, அந்நடுகல் புலியுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது கண்டறியப்பட்டது.
நான்கு அடி உயரம்
சுமார் மூன்றடி அகலமும் நான்கு அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் இடது புரம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும், அம்பையும் தாங்கிக்கொண்டு வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்து ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காட்சி புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது.
கழுத்தில் அணிகலன்
இவ்வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி , இருகைகளில் தோள்வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு, தனது
இடது காலை முன்வைத்துப் போரிடச் செல்வது போல காட்டப்பட்டுள்ளது.
வலது புறம் புலி
வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டப்பட்டுள்ளது. எனினும் அதன் மீது அம்பு தைத்தது போல் காட்டப்படவிடவில்லை. எனவே இப்புலியை எதிர்த்துப் போரிட்ட பொழுது இவ்வீரன் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு, மாடு) புலியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்துவழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வகையான நடுகற்களை புலிகுத்திபட்டான் கல் என்று அழைப்பர்.
காக்கும் பொருட்டு
அதுபோல இவ்விடத்தில் புலியிடம் இருந்து ஊர்மக்களையோ, ஆநிரைகளையோ காக்கும் பொருட்டு சண்டையிட்ட பொழுது உயிர் நீத்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் தோற்றம் மற்றும் சிற்பமைதியை வைத்து இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய நடுகல்லாகக் கருதலாம்.
மோர்புட்டான் கல்
ஊர் மக்கள் இந்நடுகல்லை "மோர்புட்டான்" கல் என்ற பெயரில் வழிபாடுசெய்கின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் வைகாசி மாதம் பொங்கல்வைத்து வழிபாடு செய்கின்றார். மலையில் வாழும் மக்களில் "மோர்பட்டான்" என்ற ஒரு தனி குலம் இருப்பதாகவும் , அக்குலம்முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும் முனைவர் திரு கமல கண்ணன் தெரிவித்தார். இதன்மூலம் இந்தநடுகல் வீரனும் ஊரைக் காக்கும் பொருட்டு உயிர் விட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஜவ்வாதுமலைத்த தொடரில் புலிகள் இருந்தமைக்கான சான்றாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல்.
































