New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது ஏறும் பக்தர்களுக்கு நிபந்தனை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது ஏறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள்:

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

கோயில் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்க கொண்டுவர வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. நவ. 26-ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.