குடும்ப அட்டை சேவைகளை தொடர்ந்து பெறுவதற்காக, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஜூன் 30-க்குள் e-KYC பதிவை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று e-KYC பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை குடும்ப அட்டை விவரங்களை புதுப்பித்து, அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளர்களுக்கு சரியாக சென்றடைவதை உறுதி செய்யும்.
மேலும், வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களால் வெளியூரில் தற்காலிகமாக வசித்து வருபவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் e-KYC பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற அல்லது வேறு இடங்களில் நிரந்தரமாக வசிக்கும் உறுப்பினர்களின் பெயர்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நீக்கம் செய்து குடும்ப அட்டையை புதுப்பிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் e-KYC பதிவு செய்யாதவர்கள் குடும்ப அட்டை சேவைகள் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



