இதையடுத்து, பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்ற பிரிவுகளுக்கான கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டன. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி முதல் கடந்த மாதம் 9-ம் தேதி வரை நடந்தது. அதன் பின்னர் 2-வது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்தது.
நிறைவாக மூன்றாவது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவில், பொது பிரிவில் 95,046 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை 80,951 இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவில் 11,058 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவர்களில் கடந்த 31-ம் தேதி வரை 8,475 பேர், தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்ந்துள்ளனனர். இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்திவிடும்.
மொத்தமாக நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 1 லட்சத்து 60,780 இடங்களில், 90,201 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக துணைக் கலந்தாய்வு வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



