Tiruvannamalai Temple

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.No.29470/2017, W.P.No.29965/2017 மற்றும் WMP.No.31767/2017 நாள்: 29.11.2017-ன் தீர்ப்பில் திருவண்ணாமலை தீபத்திருநாளன்று, அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 10.12.2019 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தினத்தன்று அண்ணாமலையார் மலை மீது 2500 பக்தர்கள் ஏறுவதற்கு கீழ்கண்டவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் 10.12.2019 அன்று காலை 06.00 மணி முதல் 2500 பக்தர்கள் மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 10.12.2019 அன்று காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி, செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இந்த அனுமதி சீட்டு 2500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்படி சிறப்பு கவுண்டரில் வழங்கப்படும்.

மலை ஏற அனுமதி கோரி வரப்பெறும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மலை ஏறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் மலை ஏறி இறங்க வேண்டும், மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அண்ணாமலையார் மலை ஏறும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. சு. கந்தசாமி, IAS., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.