i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரச்சிற்பங்களை புதுப்பிக்கும் பணி (24.10.2019)

உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் இங்குள்ள மலையே சிவனாக கருதப்படுவதால் 14 கிலோ மீட்டர் மலையை நடந்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவலப்பாதையில் எண்ணற்ற மரங்கள் மற்றும் மலையில் மூலிகை செடிகளும் அதிக அளவில் காணப்படுகிறது. பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா போன்ற விசேஷ நாட்களில் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும். இவ்வாறு புகழ் வாய்ந்த கிரிவலப்பாதையில் எண்ணற்ற மரங்கள் பட்டுப்போனது.

இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, பட்டுப்போன மரங்களை சிற்பங்களாக மாற்ற முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து கிரிவலப்பாதையில் பல்வேறு உருவங்களில் பட்டுப்போன மரங்கள் மரச்சிற்பங்களாக உருமாறி நிற்கின்றன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த சிற்பத்துடன் நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் பக்தர்கள் சிலர் இந்த சிற்பங்கள் மேல் ஏறியும், சாய்ந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதை தடுக்கும் பொருட்டு சிற்பங்களை சுற்றி வேலி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெயில் போன்ற காரணங்களால் பல சிற்பங்கள் சேதமடைந்து வருகிறது.

தற்போது கார்த்திகை தீபத்திருவிழா வர உள்ள நிலையில் மரச்சிற்பங்களை புதுப்பிக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மரச்சிற்பங்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள சிற்பங்களை மரச்சிற்பிகள் புதுப்பித்து வருகின்றனர்.