Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்கள் வாங்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல் (23.10.2019)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்கள் வாங்க வேண்டும் என்றும், புகார் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணையும் கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாடு காலம் (காலவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006–ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபபோகிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தமாக புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.