
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகேயுள்ள, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலையான ‘தாய் தெய்வம்’ கற்சிலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அறிக்கை அனுப்பியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகள் உள்ளன. அக்கால மக்கள் இறந்த பின்பு எழுப்பும் நினைவு சின்னங்களில் இருந்து, அவர்களின் வாழ்க்கை முறை, அணிகலன்கள், புழங்கு பொருட்கள், வழிபாடு உள்ளிட்ட பல வரலாற்று தகவல்கள் கிடைக்கின்றன.அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க, மனித உருவத்தையொத்த சிலை ஒன்று, தண்டராம்பட்டு தாலுகா, தா.மோட்டூர் கிராமத்தில் உள்ளது. இந்த சிலையை பாதுகாக்கவும், அதன் வரலாற்று சிறப்பை வெளி கொண்டுவந்து, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்மொழிவு அறிக்கை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அடுத்த தென்பெண்ணையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது டி.வேலூர் மதுரா தா.மோட்டூர் கிராமம். இந்த கிராமத்தின் மலைக்கு செல்லும் வழியில் இருந்த 60க்கும் மேற்பட்ட கல்வட்டங்களில், பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்துவிட்டன.தற்போதுள்ள கல்வட்டங்களில் ஒன்றில், தனித்துவமான சிலையாக தாய் தெய்வக்கல் அமைந்திருக்கிறது
































