
கல்வராயன் மலைகள் :
தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ளது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.
கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிபிடபடுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை.
அமைவிடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைகள் உள்ளது. இது காராளன் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே சேலம், தருமபுரி மாவட்டம், கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
சுற்றுலா இடங்கள்:
கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன.குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம் மற்றும் சின்னசேலம் தொடர்வண்டி நிலையமாகும், அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.
































