
புதிய கற்காலப்பகுதி:
பழங்கற்கால மக்கள் கரடுமுரடான கற்கருவிகளைப் பயன்படுத்தினர். ஆனால் புதிய கற்காலத்திய மக்கள் அத்தகைய கற்கருவிகளைவிடுத்து, வழவழப்பான கற்கருவிகளைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தினர். கற்கருவிகளைப் பயன்படுத்தியதுடன் இவர்கள் முதன்மையான சில தொழிற்கூறுகளையும் கண்டு வாழ்ந்தனர். நாடோடிகளாக வேட்டையாடித் திரிந்த நிலைமாரி - ஓரிடத்தில் நிலையாகக் குடிசை, வேளாண்மையும் செய்யத் தொடங்கிய இவர்களது காலம் ஒரு புரட்சிக்காலம் எனலாம். இப்புதிய கற்காலத் தொல்பழங்காலத்தின் திருப்புமுனை எனவும் கூறலாம். உணவைத்தேடிச் செல்லும் நிலையை மாற்றி, உணவை உற்பத்தி செய்யும் நிலையை அடைந்தனர். விலங்குகளைத் தேடியலைந்து வேட்டையாடிய இவர்கள், அவற்றை வீட்டு விலங்குகளாக மாற்றினர்.
நாடோடிகளாகத் திகழ்ந்த இவர்கள் ஓரிடத்தில் நிலையாகத்தங்கி வாழ்ந்தனர். குடிசைகள் கட்டத்தெரிந்துகொண்டனர். மண்பாண்டங்கள் செய்யவும், வண்ண ஓவியங்கள் தீட்டவும் கற்றுக்கொண்டனர். உலகின் எல்லாப்பகுதிகளிலும், புதிய கற்கால மக்கள் இத்தகைய முன்னேற்றங்களைக் கண்டனர். கி.மு.6000த்திற்கும் கி.மு.5000த்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடுகளில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததாகத் தொல்லியர் கருதுவர். இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட வடக்குப்பகுதிகளில் ஏறத்தாழ கி.மு.2300 - கி.மு.1400 ஆண்டுகளிலும், கிருஷ்ணா பள்ளத்தாக்கு உள்ளிட்ட மண்டலங்களிலும் புதிய கற்காலத்தின் காலம் கணிக்கப்பட்டுள்ளது.
இவை ஏறத்தாழ சிந்துவெளி நாகரிக காலத்திற்குச் (கி.மு.2300 - கி.மு.1750) சம காலத்தியவராகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்து புதிய கற்கால புரட்சிக்காலத்தின் பிற்பகுதி தொல்லியல் சங்ககாலத்துடன் (Chalcolithic Age) இணைந்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இந்திய புதிய கற்காலப்பகுதிகளில் ஆய்வாளர்கள் தற்போது மூன்று பிரிவுகளாகப் பகுத்துள்ளனர்.
அ. வடமேற்குப்பகுதி,
ஆ. கிழக்குப்பகுதி,
இ. தெற்குப்பகுதி ஆகும். ஆய்வாளர் சிலர் முன்பு இதனை நான்கு பிரிவுகளாகவும் பகுத்தனர்.
































