
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூர் பகுதியில் பாழடைந்த நிலையில் ஒரு மசூதி போன்ற கட்டிடமும் அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவை 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசூரில் கிடைத்த எழுத்துடைய 2 நடுகல்லில் ‘சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார்’ என்றும், மற்றொன்றில் ‘சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் மகன் சீலன்’ என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீரனின் கையில் கத்தியும், கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.
சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற் குறிப்பிட்ட கொற்றம்பாக் கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர். தமிழகத்தில் கிடைத்த நடுகற்களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இதுவேயாகும். இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கு சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன.
































