அத்திமூர் கோட்டை என்றும் பொத்தரை கோட்டை அழியும் நிலையில் தமிழகத்தின் பெருங்கோட்டை..
தமிழ்நாட்டில் மலைமீதுள்ள கோட்டைகளில் புகழ்பெற்றவை சங்ககரி, செஞ்சி போன்றவையாகும். அதற்கு இணையாக சுமார் 5 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு கோட்டை அழியும் தருவாயில் உள்ளது. இதை தமிழக வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கூட இதுவரை பார்த்ததில்லை. உள்ளூர் மக்கள் சிலரும் அரிதாக சில ஆர்வலர்களும் இக்கோட்டையை பார்த்திருக்கிறார்கள். இக்கோட்டையைப் பற்றி 140 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில அரசால் வெளியிடப்பட்ட மாவட்ட விவரச்சுவடியில் மட்டும் சில குறிப்புகள் உள்ளன. அதன்பிறகு வேறு எங்கும் இக்கோட்டையைப்பற்றிய குறிப்புகள் இது வரை பார்க்கவில்லை.
மாவட்ட விவரச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோட்டை இருப்பிடம் பற்றி தொடர்ந்து விசாரித்ததில் அண்மையில் தான் அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தோம். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீதர், பழனிச்சாமி, வேலூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் குமரன், போளுர் எச்சல் கிராபிக்ஸ் சரவணன், குன்னத்துர் அபி, மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் இருவரும் சேர்ந்து இம்மலைக் கோட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். ஆம் இக்கோட்டை அத்திமூர் கோட்டை என்றும் பொத்தரை கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் இக்கோட்டைக்கு வைத்த பெயர் கர்னாடககிரி, போளுரில் இருந்து அத்திமூர் வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் வலப்புறமாக உள்ள தனித்திருக்கும் பெரிய மலையில் மேல் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை மதில் சுவர் சுமார் 5 கி.மீ மேல் நீண்டு செல்கிறது.
குறுக்கும் நெடுக்குமாறு பல சுவர்கள் நீண்டு செல்கின்றன. மிக நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாததால் கோட்டைக்குள்ளும் மதில் சுவர்களிலும் மரங்கள் வளர்ந்து கோட்டையை சிதிலமாக்கிவிட்டன. இக்கோட்டை மராத்தியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக மாவட்ட விவரச்சுவடி குறிப்பிடுகிறது. ஆனால் மராத்தியர்களுக்கு முன்பு ஆட்சி செய்த நாயக்கர்களால் இக்கோடடை கட்டியிருக்கவேண்டும் என நினைக்கிறோம். இக்கோட்டைக்குச் செல்ல அக்காலத்தில் குதிரை வழித்தடம் இருந்துள்ளது. இன்னு முறறிலுமாக அவ்வழி அழிந்து விட்டது. மலை ஏறுவதற்கு சிரமான கடினமாக வழி மட்டுமே உள்ளது. கோட்டைப்பகுதியில் சுமார் 10 அடி உயரமுள்ள மதில் சுவரிலிருந்து 25 அடி உயரமுள்ள மதில் சுவர் நீண்டு கொண்டு செல்கிறது.
இம்மதில் சுவரில் கண்காணிப்பு கோபுரங்களும், இரகசிய அறைகளும் உள்ளன. இப்பகுதியில் ராஜாகுளம், ராணிகுளம், சிம்ம தீர்த்தம் போன்ற குளங்கள் உள்ளன. கோயில் போன்ற ஒரு மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தில் அனுமன் , பாம்பு, மீன் சிற்பக்ஙள் உள்ளன. சிதைந்த நிலையில் பல கட்டிடங்கள் உள்ளன. வெடிமருந்து தொழிற்சாலை, குடோன்கள் உள்ளன. அதிகமாக சிதைவடைந்துள்ளதால் முழுமையாக ஆய்வு செய்ய இயலவில்லை, மேலும் இப்பகுதியை ஒரு நாளில் பார்த்துவிட முடியாது, குறைந்தது 2 முழு நாட்கள் தேவைப்படும். இக்கோட்டை ஓரளவிற்காவது பயன்படுத்தும் நிலையில் இருந்தால் குதிரை வழித்தடத்தை சரி செய்து இதை சுற்றுலாத்தலமாக ஆக்கலாம், தற்போது வாய்ப்புக்கள் குறைவு. ஆர்வலர்கள் இக்கோட்டையை பார்க்கவும் ஆய்வு செய்யும் அளவிற்காகவது இவ்விடத்தை பாதுகாக்கவேண்டும் முயல்வோம்.
(குறிப்பு - இக்கோட்டையைப் பார்க்க உடனடியா முயற்சிக்க வேண்டாம், மலை ஏறுவது கடினம், நானும் பாதி வழியில் நின்றுவிட்டேன், உடல் ஒத்துழைக்கவேண்டும், தற்போது வெயில் காலம் என்பதால் மிகவும் சிரமம், தண்ணீர் கிடைக்காது, செப்டம்பர் முதல் ஜனவரி வரை உகந்த நாட்களாக இருக்கும். )




































